×

கள்ளக்குறிச்சி தொகுதியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் பிரபு எம்எல்ஏ

விழுப்புரம், அக். 10: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு. இவரது சொந்த ஊர் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம் கலையநல்லூர் கிராமம் ஆகும். தந்தை பெயர் அய்யப்பா. அதிமுக ஒன்றிய செயலாளர் பொறுப்பில் உள்ளார். தாய் தைலம்மாள் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்தில் முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவராக பதவி வகித்தார். பிரபு எம்எல்ஏ  கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூர் அரசு மருத்துவமனையில் பிறந்தார். 9ம் வகுப்பு வரை பெங்களூரில் உள்ள பள்ளியில் படித்துள்ளார். 10ம் வகுப்பு கடலூர் மாகடன் பள்ளியில் படித்து முடித்தவர். 11ம் வகுப்பு கடலூர் செயின்ட்ஜோசப் பள்ளியில் படித்துள்ளார். 12ம் வகுப்பு கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிக் பள்ளியில் படித்து முடித்தவர். சென்னை எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் பிடெக் படித்து முடித்ததும் 2000ம் ஆண்டில் முதல் முறையாக அரசியல் ஈடுபாடுடன் இருந்துள்ளார். அப்போதே அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகவும் சேர்ந்தார். 2008ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தியாகதுருகம் ஒன்றிய பாசறை செயலாளராக பிரபுவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போது பிரபுவின் தாய் தைலம்மாள் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவராகவும், தந்தை அய்யப்பா மாவட்ட கவுன்சிலராக பொறுப்பில் இருந்தபோதும் தொடர்ந்து தாய், தந்தையுடன் இணைந்து அதிமுக கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.

தந்தை அய்யப்பா தற்போது தியாகதுருகம் அதிமுக ஒன்றிய செயலாளராக உள்ளார். தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராகவும் பொறுப்பில் இருந்துள்ளார். பிரபு எம்எல்ஏ முதல் முறையாக கடந்த 2014ம் ஆண்டு விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட கட்சியில் சீட்  கேட்டு கட்சி தலைமையில் பணம் கட்டியுள்ளார். அப்போது தேர்தலில் போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. அதனை தொடர்ந்து கடந்த 2011ம் ஆண்டு கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கட்சியில் சீட் கேட்டும் கட்சி தலைமையில் பணம் கட்டியுள்ளார். அப்போதும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. மூன்றாவது முறையாக 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட கட்சி தலைமையில் சீட் கேட்டு பணம் கட்டியிருந்தார். அப்போது நேர்காணலில் தேர்வாகிய பிரபுவுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார். முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் பிரபு. தமிழகத்தில் இளம் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமை பெற்றார். மேலும் தமிழகத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களிலேயே இவர்தான் திருமணம் ஆகாத சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையும் பெற்றார்.

கள்ளக்குறிச்சி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று சாதனை படைத்து வரும் பிரபு எம்எல்ஏ  தொகுதியை மேம்படுத்த மக்கள் பணியில் பல்வேறு திட்டங்களை கொண்டுவர தொடர் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். அதாவது கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம் ஆகிய ஒன்றியங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி நகராட்சி, தியாகதுருகம் பேரூராட்சி ஆகிய அலுவலகங்களில் ஒவ்வொரு அலுவலகமாக அதிகாரிகளிடம் மக்கள் பிரச்னைகளை தீர்க்க ஆலோசனை கூட்டம் நடத்தி உடனடி தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். கடும் வறட்சி காலத்தில்கூட கள்ளக்குறிச்சி தொகுதியில் குடிநீர் பிரச்னை ஏற்படாதவாறு அவ்வப்போது அதிகாரிகளிடம் துரித பணி மேற்கொண்டு குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுமட்டுமல்லாமல் தொகுதி முழுவதும் 50க்கும் மேற்பட்ட கிராம தார்சாலை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.    

பிரபு எம்எல்ஏ சாதனைகள்: தியாகதுருகத்தில் புதியதாக தீயணைப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து இருந்த நிலையில் பிரபு எம்எல்ஏ முயற்சியால் புதிய தீயணைப்பு நிலையம் அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு 110 விதின் கீழ் எம்ஆர்ஐ ஸ்கேன் அமைக்கப்பட்டது. மேலும் அரசு மருத்துவமனைக்கு டயாலிசிஸ் இயந்திரம் 2 கூடுதலாக பொருத்தப்பட்டது. தியாகதுருகம் மலையம்மன் கோயிலை சுற்றி கிரிவலப்பாதை அமைக்கப்பட்டது. சின்னசேலம் ஒன்றியம் நயினார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிறுநீரக சிகிச்சை பிரிவு கட்டிடம், மத்திய கிருமி நீக்கம் மற்றும் வழங்கல் வசதி புதிய கட்டிடம் மற்றும் கூடுதல் அறுவை அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டது.    
கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பிரிவு, பொது மருத்துவ அறுவை அரங்கம், தீவிர சிகிச்சை பிரிவு, ஆய்வக பரிசோதனை கூடம் அமைக்கப்பட்டது. 2016-17ம் ஆண்டில் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம் சித்தலூர் அரசு நடுநிலைப் பள்ளி உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 2017-18ம் ஆண்டில் வடதொரசலூர், பானையங்கால், நின்னையூர் ஆகிய அரசு நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதேபோல 2016-17ம் ஆண்டு கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் வாணவரெட்டி அரசு நடுநிலை பள்ளி உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 2017-18ம் ஆண்டில் தென்கீரனூர் அரசு நடுநிலை பள்ளி உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் விரிவாக்கம் செய்து புது பொலிவுடன் அமைக்கப்பட்டது.

புதிய திட்டங்கள் கொண்டுவர அரசிடம் பிரபு எம்எல்ஏ  வலியுறுத்தல்: கள்ளக்குறிச்சி தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல். கள்ளக்குறிச்சி பகுதியில் 110 கேவி துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தல். தியாகதுருகம் தலைமையிடமாக கொண்டு தனி வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வலியுறுத்தல். கள்ளக்குறிச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வலியுறுத்தல். கல்வராயன்மலை அடிவார பகுதி மேல்பரிக பள்ளத்தாக்கில் புதிய தடுப்பணை அமைக்க வலியுறுத்தல். கள்ளக்குறிச்சி நகரை சுற்றி ரிங் ரோடு அமைக்க வலியுறுத்தல். சித்தலூர் ஆற்றில் உயர்மட்ட மேம்பாலம், பொரசக்குறிச்சி -விருகாவூர் இடையே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல். கள்ளக்குறிச்சி புறவழிசாலை அமைக்க வலியுறுத்தல். கள்ளக்குறிச்சியில் டிஇ அலுவலகம் அமைக்க வலியுறுத்தல். கள்ளக்குறிச்சி புறவழி சாலை பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தல்.

Tags : Prabu MLA ,constituency ,Kallakurikkur ,
× RELATED விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...